
திருச்சி நோக்கிச் செல்லும் காரின் பின்னிருக்கையில் அமர்ந்திருந்தேன். இருள் என்றால் அப்படி ஒரு இருள். என் இருப்பை மட்டுமே உணரமுடிந்த இருள்.
காரில் நிரம்பிப் பெருகி வெளியெங்கும் பரவி வானளவு நிறைந்திருந்த இருள், பாய்மமாகியது. ஓட்டுநரும் இருளில் கருப்புச் சித்திரமாகியிருக்க, வாகனத்தின் முன் காணும் சாலையில் விளக்குகள் ஓடி ஓடி சாலையை எட்டின. எங்கெங்கும் இருளின் பாய்மத்தில் தானும் இல்லாது போகையில் நிறைந்த இன்பம் பரவிப்பாய, அலைபேசியை அணைத்தேன். என் அகத்தில் மண்டிக்கிடந்த சித்திரங்கள் எல்லாம் வெளியே எனக்கு மட்டுமேயான உணர்வு வெள்ளமாக நிறைந்திருந்தது. இந்தப் பேரண்டத்தில் நான் மட்டுமே இருப்பதான ஒரு முழுநிலை. ஆன்மீகமெல்லாம் இல்லை. ஆழ்நிலை என் மன உண்மைகள் எல்லாம் வெளியே வந்து பாய்ந்தன. எவ்வளவோ காலமாய் எல்லையற்ற காலமாய் நான் வாழ்ந்து கொண்டே இருக்கிறேனோ என்று உணரும் மாத்திரத்திலேயே காருக்குள் மீண்டேன்.
உலகம் ஏதேதோ முற்காலம் நோக்கி ஓட, வானிலிருந்து நட்சத்திரங்கள் இடைநிலையில் தொங்கின. பாதியாய் வளர்ந்திருந்த நிலா காய்ந்தது. ஆங்கே மின்னல் வெட்டி வெட்டி மேற்கின் திசையைக்காட்டியது. அப்படியே நேரே ஒரு பகலுக்குள் சென்றிறங்க வேண்டியிருக்குமே என்ற முன்னெச்சரிக்கையும் பீடித்தது.
வாகனம் வளைந்தோடி ஏறி இறங்கி வந்து நின்ற இறக்கத்தில் நானும் இறங்க அவளும் இறங்கினாள். இருளின் தனிமை எவ்வளவு இதமாக இருந்தது என்று சொல்லிவிட்டு இருளிலேயே கரைந்து போனாள். வாசல் விளக்குகளைப் பட்டென்று எரிய விட்டு அத்தனை இருளையும் போக்கி தற்காலத்திற்கு அழைத்துவந்தாள் அம்மா.
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi