
கடந்த பதினைந்து நாட்களில், ஒரு பத்து பெண்களின் வாழ்க்கை கதைகளையேனும் கேட்டிருப்பேன். ரயிலில் செல்கையில், ரயில் நிலையத்தில் காத்திருக்கையில், உறவினர் வீட்டிற்குச் செல்கையில், விடுதியில் தங்கியிருக்கையில், தெருவில் நடந்து செல்கையில் என இதற்கு முன் முகம் காணா, முகம் அறிந்த வெவ்வேறு பெண்களின் கதைகள். அவர்களே வந்து பகிர்கிறார்கள். எந்தச் சினிமாவிலும் இடம்பெறாத கதைக்களங்கள். தம் வாழ்வைப் பகுத்துப் பகுத்து அறிந்து சொல்லும் பெண்களின் வாழ்க்கை கதைகள்.
பெரும்பாலும், கதைக்கரு அவர்கள் வாழ்க்கையைத் தின்ற, தின்ன முயன்ற ‘பகை’, பற்றிய கதை. பகை என்பது பெரும்பாலும் அவர்களைச் சூழ்ந்த உறவினர்களே, நண்பர்களே வரைந்த கட்டங்களின் விளைச்சலாக இருக்கும். பகை என்றால் சகோதரிகளுக்கு இடையிலும் பகை, சகோதரர்களுக்கு இடையிலும் பகை. அந்தப் பகைப்புலத்தில் குடும்பம், திருமணம், உறவு, காதல் எனும் உறவு நிலைகளின் அம்சங்களின் அரசியல் நிறைந்திருக்கும். சமூக அரசியலின் குறுக்குவெட்டுத்தோற்றத்தைப் பிரதிபலிக்கும். பெரும்பாலும் பெண்கள் இரவு பகலாய்ப் புகைந்த தம் வாழ்வின் அன்றாட ஓட்டங்களினூடே இந்தப்பகைகளை வென்ற தீரர்களாய் இருக்கின்றனர். இந்தக்கதைகளின் பின்புலத்தில் பொருளாதாரம், சாதி, மதம் வேறுபாடில்லை. பகை என்ற உணர்ச்சியின் தீவிரம், தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையை எரித்துப் போடுவதாக இருந்தாலும், இந்தப்பெண்கள் எல்லோரும் தம் மதி நுட்பத்தால், கடும் துணிவால் வென்று கரையேறத்துடிக்கும் மனத்துடன் இயங்குகின்றனர். உழைப்பும், விடுதலை உணர்வும் அவர்களை எப்படியோ அந்தப்பகைப் புலத்திலிருந்து வெளியேறச்செய்துவிடுகிறது. பகையின் கட்டங்களின் விஞ்ஞான அறிவைப் பெற்றவர்களாய் இருக்கின்றனர்.
இந்த அனுபவத்திற்குப் பின், இப்பெண்கள் முத்துகளைப் போல் துலங்குகின்றனர் என்று சொல்லவேண்டும். இவர்கள் கண்களில் கண்ணீர் உற்பத்தியாவதே இல்லை. இந்தக்கதைகளைக் கேட்டபின், ‘பகை’, பற்றிய முனைவர் பட்டமே பெற்றுவிடும் அளவிற்கு ‘பகை’யின் இயங்கியல் மற்றும் வரைபடம் செவ்வனே எனக்கும் புரிந்ததாகிறது. வாழ்வின் வேறெந்தத் தத்துவத்தின் மீது கவனத்தைத் திருப்பிவிட முடியாத படிக்கு இந்தப் பகை என்பது அன்றாட வாழ்வைப் பீடித்துவிட்டதாக இருக்கிறது. என் சொந்த ஊரில் சந்தித்த என் உறவினர் பெண்ணின் மகன், தன் தாயுடன் ஆறு ஆண்டுகள் உறவை அறுத்துவிடும் படியான ஒரு பகையைச் சொந்தச் சகோதரனே தாய்-மகன் வாழ்வில் விதைத்து வைக்கிறார். அப்படியாக, வரையப்பட்ட கட்டங்கள் ஒவ்வொன்றையும் அந்தப் பெண் தன் மூர்க்கமான மதியால் அழித்து அழித்து முன்னேறித் தன் மகனின் அன்பையும் புரிதலையும் வெல்கிறார்.
பகை என்பது நாம் அறியாதோரிடமிருந்து உருவாவதில்லை. நாம் அறிந்தோரிடத்தே விளைச்சல் கொள்வது. இப்படியாகப் பல பெண்கள், தம் முழு வாழ்விலும் மூளும் பகையை அழித்தொழிப்பதிலேயே காலம் நகர்த்துகின்றனர்.
Painting: 1799 painting by French artist Jacques-Louis David
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi