யாழினிஸ்ரீயின் “மரப்பாச்சி கனவுகள்”

யாழினிஸ்ரீயின் “மரப்பாச்சி கனவுகள்”

02 Oct 19
Article


யாழினிஸ்ரீயின் கவிதை நூல் வெளீயீட்டு விழாவிற்காக 13.10.19 அன்று நீங்களும் மேட்டுப்பாளையம் வாருங்கள். இந்தக் கவிதை நூலின பின்னணியில் கவிஞர் தனசக்தியின் ஈடுபாடும், படைப்பாளி ஜீவாவின் உழைப்பும் நிரம்ப இருக்கிறது. கவிதைகளை மொத்தமாக வாசித்துமுடித்தேன். ஒரு “மாற்றுத் திறனாளி பெண்ணின் கவிதைகள்”, என்று அடைமொழி கொடுக்க வேண்டிய தேவையில்லை. கவிதை என்பதே ஒரு மாற்றுத் திறன் தான். கவிதையின் வழியாக மனித இனம் தன் எதிர்காலத்திற்கான மொழியைக் கண்டடைந்து கொள்கிறது. மொழியைப் புதுப்பித்துக்கொள்கிறது. அர்த்தங்களை மாற்றுகிறது. நம்பிக்கையின் அத்தனை வாசல்களையும் திறந்துவிடக்கூடிய சொற்களையும் மொழியையும் கவிதையையும் எழுத்தின் போக்கில் கண்டறிந்து கொண்டே செல்கிறார், யாழினிஸ்ரீ.

தம்மை ஒடுக்கும் அநீதிகளை எதிர்க்கும் ஆயுதமாகவும், வழியாகவும் கவிதை அமைந்துவிடுவதன் பின்னே மொழியின் வரலாறும், உடல் அரசியலும் சேர்ந்து கொள்கிறது. இங்கே உடல் அரசியல் என்பது, பாலினம், பால் வேறுபாடு, பாலியல் சார்ந்து உருவாகும் விவாதமும் கருத்தியலும் மட்டுமே அல்ல. மானுட இன வரலாற்றில் உடலைக் களமாகக் கொண்டு பிறக்கும் கலை அரசியலும் கூட.

யாழினிஸ்ரீயின் சில கவிதைகள்:

வெறுமை குறித்த ஒரு கவிதை

அந்த அறையில்
நிசப்தத்துடன் பதுங்கியிருக்கும்
வெறுமையின் இருப்பை
துல்லியமாய்க் காட்டிக்கொடுத்தது
கிழிக்கப்படாத நாட்காட்டித்தாள்கள

சூடிக்கொடுக்கும் சுடர்க்கொடி

மார்கழிப்பனியில்
மலர்ந்து மணக்கும் மலர்களை நின்
குழலோசையால் தொடுத்துவா
சூடிக்கொடுக்கக் காத்திருக்கிறேன்

சதிகளின் நிறங்கள்

வாக்கு தவறிய பொழுதில் சொல்வண்ணம்
துரோகக்கரி பூசிய பொழுதில் செயல்வண்ணம்
இப்படி வரிசைப்படுத்துமளவிற்கு
யாம் குரோதம் மிக்கவரல்ல
நீவிரது வண்ணங்களை நீவிரே அடுக்குங்கள்
முடிவில் வானவில் வராதென்பது
நீவிரே அறிந்த ஒன்று
எங்கே தொடங்கும்
உம் சதிகளின் நிறப்பட்டியல் தயாரிப்பை
எவருமற்ற மெழுகுவர்த்தி ஒளி சூழ் அறையில்

தட்டாமாலை சுழற்றலில் எதிரெதிரே விழுந்து சுழலும் கவிதையும் சினிமாவும் ஒன்றையொன்று நெருங்காதவை என்ற எண்ணத்தை நடிகர் விஜய் சேதுபதி மாற்றி வைத்து, யாழினிஶ்ரீயின் கவிதைகளைச் சமூகத்திற்கு அறிமுகப்படுத்தி வைப்பது சமநீதியின் அறிகுறி. எவர் எழுதும் கவிதையும் நம்முடையவை.

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi