கொரோனா காலம்

கொரோனா காலம்

08 Apr 20
Article


எந்த ஒரு மனிதனும்
ஒரு முறை கால் வைத்த நதியில்
மீண்டும் கால் வைக்க முடியாது
என்றார், ஹீராக்ளீட்டஸ்
(கி.பி. 544 - 483)
எல்லோரும் இதை ஒரு விடுமுறை, இதுவும் கடந்து போகும், மீண்டும் நாம் அந்தப்பழைய வாழ்விற்குச் செல்வோம் என்று நம்புகிறோம். ஆனால், அது சாத்தியமில்லை என்பது போல அழகிய வனவிலங்குகளும் பறவைகளும் நாம் ஒரு காலத்தில் நடந்து கொண்டிருந்த சாலைகளுக்கு வந்துவிட்டன. ஒரு விசித்திரமான, இது வரை நாங்கள் கண்டிராத ஒரு பறவை அதிகாலையே எங்கள் சன்னலில் வந்தமர்ந்து விடாது ஒலிக்கிறது. அவ்வளவு அழகான விடுதலைக்குரல். உலகின் வெவ்வேறு அரசியல் புள்ளிகளுக்கு இடையே நாம் உருட்டிவிடப்பட்டிருக்கிறோம். எங்கு எது எப்படி மோதும் என்ற சாத்தியங்களை எதிர்நோக்கிய பகல்களுக்குள் நம்மைத் திணித்துக் கொண்டிருக்கிறோம். நாமெல்லோரும் ஒரு குகைப்பாதைக்குள் நுழைந்திருக்கிறோம். உலகமே வீட்டிற்குள் அடங்கி வீடாகிவிட்டது. புனைவுகள் வாசிக்கப்பிடிக்கவில்லை, சினிமாக்களும் பிடிக்கவில்லை. அவையெல்லாம் முன்பிருந்த உலகத்தைச் சேர்ந்த புனைவுகள் போல இருக்கின்றன. முந்தைய உலகத்தின் தர்க்கத்திற்கும் இன்றைய நம் தர்க்கத்திற்கும் தொடர்புகள் தாம் என்ன என்ற கேள்விகள். புதிய உலகத்தை, வாழ்வை நோக்கி யார் என்ன எழுதியிருக்கிறார்கள். சில கவிதைகள் மட்டுமே காலம் விட்டு காலம் ஊடுருவும் சொற்களைக் கொண்டிருக்கின்றன. நிகழ்காலமோ, எதிர்காலமோ, இறந்தகாலமோ அவற்றிற்கு இல்லை. வெகு சில கவிதைகள். கதைகளை முக்காலத்திற்கும் நீட்டிக்கும் கதைமாந்தர்களுடன் வெகு சிலரே இயங்கியிருக்கின்றனர். பசிக்கான தர்க்கம் மட்டும் அன்றும் இன்றும் என்றும் ஒரே தர்க்கமாகி வாழத் தலைப்பட்டிருக்கிறோம். பசியின் நீளச்சாலைகளில் நடப்பவர்களால் சபிக்கப்படும் தேசத்தில் நாம் எப்படி வீட்டிற்குள் விடுதலையாக வாழ முடியும், விளக்கேற்றமுடியும். நாம் முன் செல்ல இருக்கும் சாலையின் காலம் இன்னும் நீளமானதாக இருக்கலாம். நோயும் கொடுந்தனிமையும் பசியும் வறுமையும் சூழ் காலம் இன்னும் எவ்வளவு பரிசோதனைகள் நிறைந்ததாக இருக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஹீராக்ளீட்டஸின் வரியைத்தான் நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும், ஒரே நதியில் இரண்டு முறை நாம் நனையமுடியாது.

Artist: Rene Magritte
Le mal 'du pays: Homesickness 1940

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi