சென்னை ஒரு மாய நகரம். தினம் தினம் தன் உருமாற்றும் நகரம். சென்னைக்கு விசித்திரமான நிறைய பண்புகள் உண்டு. உங்கள் வாழ்க்கையையே ஓர் அரிய நிகழ்வால் புரட்டிப் போட்டுவிடும். உங்களின் வியப்பான, திகைப்பான மறுபக்கத்தை உங்களுக்குகே காட்டிவிடும். சமீபத்தில் ஓர் இளம்பெண் சொன்னார், ‘நான் இப்படியான ஓர் ஆளுமையாவேன் என்று நினைத்தக் கூடப் பார்த்ததில்லை. சென்னை தான் இதைச் சாத்தியப்படுத்தியது. எங்கள் ஊரில் என்றால் ஒரு திருமணத்துடன் என் வாழ்க்கை முடிந்து போயிருக்கும்’, என்று.
சென்னை கடற்கரையும் கடலும் பிரமாண்டமான அடையாளங்கள். இங்கே எல்லா சாலைகளும் எனக்கு அத்துப்படி. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, சென்னையை இரு சக்கர வாகனத்தில் சுற்றி வந்திருக்கிறேன். எவ்வளவோ பேரைச் சந்தித்திருக்கிறேன், எவ்வளவோ பேரை மறந்திருக்கிறேன். நிறைய மரங்கள் அடர்ந்த சாலைகள் நினைவில் தங்கிவிடுபவை. தொடக்கத்தில், புத்தகங்கள் இழுத்துச்செல்லும் திசையிலெல்லாம் சென்னையில் திரிந்திருக்கிறேன். எல்லா சாலைகளும் புத்தகங்களை நோக்கியவை. பின், வாழ்வு தன் திசையில் என்னைக் கடத்திப்போயிற்று.
சுனாமி, தொடர் அடைமழை, வெள்ளம், தண்ணீர் வறட்சி என்று எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. பேரறிவாளன் மீதான தூக்குதண்டனை போன்ற மகத்தான போராட்டங்களை இங்கு தான் வென்றெடுத்தோம். ஈழ இனப்படுகொலை எதிர்ப்பை இங்கு தான் பதிவு செய்தோம். நிறைய பேரணிகளை இங்கு நடத்தியிருக்கிறோம். எவ்வளவோ ஒருங்கிணைவுகள் இங்கே சாத்தியமாகி இருக்கின்றன. வருவோர் போவோரை வியக்க வைத்திருக்கிறது, சென்னை. என்றாலும், புத்தகங்களின் தலைமை நகரம். எழுத்தை நம் சமூகத்தின் ஆயுதமாக்கி இருக்கிறது. பெரிய பெரிய படைப்புகளை சென்னையில் தோன்றியவர்கள், வந்து வாழ்ந்தவர்கள் படைத்தளித்திருக்கின்றனர். நூல்களின் பேரரசை இங்கு தான் உண்டாக்கியிருக்கிறோம்.
ஏஆர்ரஹ்மான், சினிமா என்ற வெளிச்சத்தின் பரப்பெல்லைகளை என்னைக் காணச் செய்திருக்கிறது. காட்சிகளை அழித்து அழித்து மீண்டும் கோலமிட ஏற்ற பரப்பினை உருவாக்கித் தரும், திறந்த மனதுடைய நகரம். இங்கு எல்லாமே தொடக்கம் தான், முடிவு என்பதில்லை. தொடக்கம், பின்னாட்களில் வேறொன்றாய் மாறி இருக்கும். அவ்வளவே. நகரமும் தன்னை நிறைய நாகரிகப்படுத்திக் கொண்டிருக்கிறது.
எங்கெங்கும் எப்பொழுதும் உழைப்பாளிகளைக் காணமுடியும். கொரோனா எச்சரிக்கையின் போது கூட, கருத்த இளைஞர்கள் கொடும் வெயிலின் கீழ் அங்குமிங்கும் உணவுகளைக் கொண்டு சேர்க்கத் திரிவதைக் காணமுடியும். அதிகாலையிலும், இரவிலும் நகரத்தைத் தூய்மை செய்து கொண்டே இருக்கும் பெண்களுக்கே இந்த நகரம் சொந்தமானது என்று தோன்றும். சென்னையைத் தமக்கு நெருக்கமானதாக அவர்கள் வைத்துக் கொள்வார்கள். இந்தக் கூவத்தை மட்டும் எப்பொழுதாவது சுத்தம் செய்து ஓர் அழகிய நதியாக்க முடிந்தால் சென்னையில் வந்து வாழ்ந்த பலன் ஈடேறிவிடும் என்று தோன்றுவதுண்டு.
என் அம்மா சென்னை வர யோசிப்பார். ‘எப்ப பாத்தாலும் ஆம்புலன்ஸ் சத்தம், நான் வரவில்லை’, என்பார். இன்று, இத்தகைய சென்னை மாநகரம் காகத்தின் கரைதல் மட்டுமே அவ்வப்பொழுது என அப்படியொரு அகண்ட மெளனத்தில் உறைந்திருக்கிறது. சென்னை, ஒரு மாய நகரம். சென்னைக்கு விசித்திரமான நிறைய குணங்கள் உண்டு. அதில் ஒன்று, தன்னை வெகு வெகு சீக்கிரம் தகவமைத்துக் கொள்வது. எதற்கும் தன்னைத் தயார் செய்து கொள்வது. ஏனெனில், புலம் பெயர்ந்தவர்களாலும் ஆனது சென்னை.

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi