மரண தண்டனை, பெண்கள் மீதான பாலியல் வன்முறைக்குத் தீர்வு இல்லை என்று பலவாறாகப் போராடியாயிற்று. இது, குற்றத்தை ஒரு பொழுதும் தீர்க்காது என்றும் பேசியாயிற்று. உண்மையில், குற்றவாளி என்ன மனநிலையில் செயல்பட்டாரோ அதே நிலைக்குச் சென்று பழிவாங்கும் குணம் கொண்டு நியாயம் பாராட்டுவது தான் மரண தண்டனை. இந்தியத் திருநாட்டில், மரணதண்டனை என்பது ஏன் நீதியன்று என்று, அதுவும் ஒரு குற்றம், இன்னும் சொல்லப்போனால், பாலியல் வன்முறைக்கு நிகரான குற்றம் என்று தான் நாம் கருதவேண்டும்.
பல மேடைகளில், தொலைக்காட்சிகள் மரண தண்டனை குறித்த விவாதங்களில் வரும் பெண்ணியப்போராளிகளும் சரி, மற்ற போராளிகளும் சரி, ஆடியன்சிடம் கைதட்டு வாங்குவதற்காக வீராவேசமாக, ஆவேசமாக மரண தண்டனை தான் தீர்வு என்று சொல்லிவிட்டுச் செல்வார்கள்.
அடிப்படையில், இது குற்றங்களை அதிகப்படுத்துவது என்று ஓர் உரையே நிகழ்த்தவேண்டும் என்று தோன்றும். சாதி, மத சிக்கலான கட்டமைப்புக்கு உட்பட்ட இந்தியாவில், குடியுரிமைச்சட்டம் ரத்துவிற்கு எதிராக நாம் ஏன் போராடுகிறோமோ அது போன்ற தர்க்கம் தான், மரணதண்டனைக்கு எதிரானதும்.
இது புரியாமல், பெண்களின் அடிப்படையான சமூக உரிமை நிலை என்று புரியாமல் மரண தண்டனையை ஆதரித்துக் கொண்டே இருப்பதால், ஒருபக்கம் குற்றம் அதிகரித்துக் கொண்டிருப்பதை அறியாத மனநிலையை எப்படி நீதி மனநிலை என்று எடுத்துக் கொள்வது.
மனித உரிமையின் பாற்பட்டு மட்டுமே மரண தண்டனையை எதிர்க்கவில்லை. நம் நாட்டில் நீதி என்பது தர்மம் என்பதும். எனில், எல்லா சமூகநிலைகளில் இருப்பவர்களுக்கும் இந்த மரண தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. சாதி அதிகாரத்தின் மேல்நிலையில் இருப்பவர்கள் இந்த மரண தண்டனையை பெற்றிருக்கிறார்களா? பெண்களின் பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்கள் அந்தத் தண்டனை குறித்து அச்சம் கொண்டிருக்கிறார்களா? சமூகத்தின் எல்லா ஊடக அமைப்புகளிலும் பெண்களுக்கு எதிரான சிந்தனை கொண்டு இயங்கிவிட்டு, எல்லா இடங்களிலும் பெண்களின் பாலியல் நிலை குறித்து இழிவான நிலை கொண்டு விட்டு, தன் பாலியல் நிலை மீது எந்தச் சுயமரியாதைக்குமான இடமும் இல்லாமல் வாழ வேண்டிய ஆண்களின் மீது மரண தண்டனை என்ன செய்யும்? இது ஒரு வெற்று நாடகம். எங்கேயேனும் நிதானமாக, விலாவாரியாக இது குறித்து மீண்டும் முதலிலிருந்து உரையாடத் தொடங்க வேண்டும்.

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi