கொரோனாவும் மருத்துவமும்

கொரோனாவும் மருத்துவமும்

19 Mar 20
Article


இம்மாதிரியான பெருங்கொள்ளை நோய் என்றால் எனக்கு நினைவிற்கு வருவது, ஆபிரகாம் பண்டிதர் செய்த மருத்துவப்பணி தான். ‘கருணாமிர்தசாகரம்’, என்ற இசைத்தமிழ் நூலை எழுதியது மட்டுமேயன்று அவர் சாதனை. இன்னும் வியக்கத்தக்கதொரு பக்கம் அவருக்குண்டு. சுருளிமலை கருணானந்தர் வழியாக கொடும் பிணிகளை நீக்கும் மருத்துவ முறைகளை அவர் கற்று அறிந்திருந்தார். 1900 - களில் தஞ்சையில் கருணானந்தர் சஞ்சீவி மருந்து நிலையம் ஒன்றையும் நடத்திவந்தார். அவர் தயாரித்துக்கொடுத்த மருந்துகளில் பெரும்பாலானவை, சஞ்சீவி மருந்துகள் தாம். சஞ்சீவி என்றால் உயிர்காக்கும் மருந்து. அன்றும் இதே போல சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகத்தையே அச்சுறுத்திய ”ப்ளேக் நோய்”க்குப் (கட்டிக்காய்ச்சல் என்றனர்) பண்டிதர் செந்தூர சஞ்சீவி மாத்திரை என்று ஒரு மருந்தைத் தயாரித்து வைத்திருந்தார். தன் மருத்துவ சேவைகள் வழியாக அவர் உலகப்புகழ் பெற்றிருந்தார். குறிப்பாக, இந்தியா, ஈழம், கடாரம் (பர்மா), மலேயா, சாவகம், சைகோன், மடகாஸ்கர் முதலிய நாடுகளில் இவர் மருத்துவம் சிறப்புற்றிருந்தது. அங்கெல்லாம் இவருடைய மருந்துகள் பயணித்தன. குழந்தை மருத்துவத்திலும் இவர் சிறந்த மருத்துவராக இருந்தார். மருந்துக்கு இவரைத் தொடர்பு கொள்ளவென்றே, அதற்கான தொகையை இவருக்கு அனுப்பவென்றே இவருக்கென்று தனியாக ஓர் அஞ்சல் நிலையம் தஞ்சையில் செயல்பட்டு வந்ததாம். கூடையில் மருந்துப்பொட்டலங்களை வைத்து தெருத்தெருவாகச் சென்று எளிய விலைக்கு மருந்துகளை மக்களுக்கு வழங்கிவந்தார். இவருடைய மருத்துவக்குறிப்புகள் அடங்கிய ஏடுகள் தேடி இன்றும் அலைந்து கொண்டிருக்கிறேன்.

என்னைப்பொறுத்தவரை, மருத்துவத்தில் இருவகையான மருத்துவம் தான். ஒருவகை, நோய் தீர்ப்பது; இன்னொருவகை, உயிர் காப்பது. சித்தமருத்துவம் குறித்து இன்று பேசத்தொடங்கினால், பெரிய சர்ச்சை தான் முன் எழுகிறது. சிக்குன் குன்யா காலத்திலும், டெங்கு காலத்திலும் சித்த மருந்து தான் முன் நின்றது என்பதை நாம் இம்மாதிரியான காலங்களில் மறந்துவிடுகிறோம். சீனாவின் பல பகுதிகளில், அதன் மரபார்ந்த மருத்துவ முறைகள் கொண்டு தான் கொரோனாவை வென்றிருக்கிறார்கள். இங்கே மரபு மருத்துவத்தைச் சொன்னால், மக்கள் மருத்துவர்களைக் குற்றம் சாட்டுவார்கள். மருத்துவர்களைச் சொன்னால், மக்களைச் சொல்வார்கள். இப்படித்தான் நம் அரிய, உயிர் காக்கும் மூலிகைகளையும், மருத்துவச் செல்வத்தையும் இழந்து வறியவர்களைப் போல் நிற்கிறோம். கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைபவர்கள் நாம்.
அந்த வகையில், என்றென்றும் எனக்கு ஆபிரகாம் பண்டிதரின் வாழ் முறைகள் மீதும், தன் பணிகளை உலகளாவிய மக்கள் நலன் நோக்கித் திருப்பியது குறித்தும் பெரிய மதிப்பு உண்டு. தனிமனிதனாக எவ்வளவு அறிவார்ந்த செயல்பாடு!

Write To Author

About

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.

Get in touch

Enquiries welcome for poetry, translations, film, and literary events.

Site: Kutti Revathi