"குண்டு", படம் இன்று வெளிவருகிறது. இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் நீலம் புரொடக்ஷன்சின் இரண்டாம் படைப்பு. வாழ்வியலையும் சமூகத்தையும் இணைக்கும் கதையுடனும் திரைக்கதையுடனும் வந்திருக்கிறார்கள். அசாதாரணமான ஓர் இணைப்பு இது. பொதுவாக, தீவிரவாதத்தையும் போரையும் அணு ஆயுதங்களையும் சொல்ல கதையை வலிந்து சமைக்க வேண்டிய கட்டாயம் இருக்கும் வணிக சினிமாவில், கடலின் கரையொதுங்கும் ஒரு குண்டு கதையின் பிறப்பிடமாகிறது. சூழலியல் மீது, வளர் இளம் தலைமுறைகள் மீதும் அக்கறை கொள்ளும் கதையும்.
நம் நிலங்களில் ஒலிக்கும் மரபார்ந்த சத்தங்களுடன் இசையுடன் வந்திருக்கிறார் புதிய இசையமைப்பாளர் டென்மா. ஒவ்வொரு மூச்சிலும் கதையின் உடன் நடந்து அதன் இன்னொரு பரிமாணத்தைச் சொல்லும் முழு துணிவையும் திறமையையும் கொண்டிருக்கிறார். இதனால், கதை பெரிய வடிவம் கொள்கிறது. திரையரங்கில் உங்கள் மீதும் இசை இறங்குவதை உணரமுடியும். நாட்டார் வழக்காற்றியல் பணி இது.
மனிதர்களின் வாழ்வியலைச் சொல்லுமிடத்து மனிதர்கள் மீது எந்தக் கரிசனமும் அவசியப்படாத சினிமாவில், புதிய வரவிது, புதிய தொனியிது. இனி யாரும், சினிமா தானே என்று சொல்லிவிட முடியாது என்ற பண்பாட்டிற்கு 'பரியேறும் பெருமாளுக்குப்' பிறகு இந்தப்படம் கூடுதல் அழுத்தம் கொடுக்கிறது.
அதுமட்டுமின்றி, திரைப்படம் என்னும் குழு படைப்பில் ஒருமையுணர்வைக் கொண்டு வருவது அவசியம் என்பதை இயக்குநர் அதியன் ஆதிரை இந்தப்படத்தின் வழியாக உணர்த்துகிறார். பல துறைக்கலைஞர்கள் இடையேயும் இந்த அவசியத்திற்கான உவகையும் உற்சாகமும் பரவி பணியாற்றி இருப்பதை உணரமுடிகிறது. திரைப்படைப்பை வெறும் ஒரு தொழிலாக மட்டுமே காணும் இந்நேரத்தில் படத்திற்கு உள்ளே பணியாற்றுபவர்களும் வெளியே அதனுடன் தொடர்பு கொள்பவர்களும் இப்படத்தை ஒரு சமூகக் கடமையாக உணர்வது மகிழ்ச்சி அளிக்கிறது.
இரும்புக்கடைத் தொழிலாளர்களுடன் இப்படியான ஒரு காட்சி காணும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. இதை எல்லோரும் தங்களுடைய படமாக ஆக்கிக்கொண்டார்கள்.
படத்தின் வெற்றிக்கும் கொண்டாட்டங்களுக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும், இயக்குநரே!

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi