இது கவிதை நூல்கள் உருவாகும் காலம். என்னைச்சுற்றிலும் சில கவிஞர்கள் தங்கள் கவிதைகளைத் தொகுப்பதில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு கவிதை நூலைத் தொகுக்கும் போதும் ஓர் ஆழமான மனவெளிக்குள் சென்று வரும் அனுபவம் எனக்குள் நிகழ்வதுண்டு. கவிதைகளைத் தொகுக்கும் போது, எனக்கு நானே சில விதிகளை உண்டாக்கி அவற்றைக் கயிறு போல் பற்றிக்கொண்டு அந்த ஒற்றைப் பாலத்தில் தனியே நடந்து சாகசங்களை நிகழ்த்துவேன். அந்த விதிகள் எல்லாம் எனக்கு நானே கட்டமைத்துக் கொண்டவை. அவற்றை இங்கே இப்பொழுது பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன்.
என்னுடைய கவிதைத் தொகுப்பு என்பது நான் எந்த ஆற்றின் கரையில் என் பால்யத்தை, இளம் வயதுக் காலத்தைக் கழித்தேனோ அந்த ஆற்றை என்னுடனேயே இழுத்துக் கொண்டு செல்வது போல. அதே ஆற்றின் கரையில் எவரெவரோ களித்திருந்தாலும் அனுபவம் எதுவுமே பொதுவானவை அன்று, அந்தரங்கமானவை. மொழி என்பது ஒரு துணைக்காரணம் தான். நாவிற்குக் கீழே மடங்கிக்கிடக்கும் உணர்வுகளைச் சொல்லாக்கிடத் துடிக்கும் அத்தனை தருணங்களையும் பதிய வைத்துக் கொண்ட பின் அதை என்ன செய்வது என்ற அலைக்கழிப்பில் தான் ஒரு கவிதை நூல் உருவாகிறது.
அந்தக் கொத்தான கவிதைகளின் மைய உணர்வை நோக்கி நகர்வது போல் கவிதைகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கிவிட வேண்டும். உறுதியாக, அவசியம் இல்லாத, அந்த உணர்வோட்டத்தில் அடங்காத கவிதைகளை தயவின்றி நீக்கிவிடுவது நன்று. ஒவ்வொரு கவிதைக்கும் தலைப்பு தான் அதன் சாவியே. வாசிக்கையில் உள்ளிழுத்துக் கொள்ளும் பெரு வழியாக அது இருக்கும். வேறெந்தக் கவிஞரையும் பின்பற்றாமல் இருப்பது நலம். அதிலும், அந்தக் கவிஞரின் அந்தக் கவிதை நூல் போல் என்றாலே, கவிதை தன் பாதையிலிருந்து வழுவி விட்டதாகும்.
கவிதை என்பது மற்ற விடயம் போல அன்று. வாசிப்பவர் அவரவர் உணர்வு, புரிதலுக்கு ஏற்றாற் போன்று தான் உள்வாங்கிக் கொள்வார். கவிஞரின் மொழியையே, பொருளையே அப்படியே பெயர்த்து அறிந்துகொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. இதயத்தைக் கீறி வழிந்த மொழி போல கவிதை தன்னைத்தானே சமைத்துக்கொள்ளும் தருணங்களை நூலை முடித்து அனுப்பும் வரை நாம் உருவாக்கிக்கொண்டே தான் இருக்கிறோம். அந்தரங்கமான உறவு கவிதை நூலுடன் தொடர்ந்து கொண்டே இருக்கும் வரை கவிதைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன என்று தான் அர்த்தம்.
எளிமை, ஆழம், இருண்மை, அகம், புறம், சொல்லமைதி, கொந்தளிப்பு, சலனம், சலனமின்மை எல்லாமே கவிதையின் உறுப்புகள் தாம். எனக்குப் பிடித்தமானவை, போர்ஹேசின் கவிதைகள். பல அடர் அடுக்குகளின் பொருள் சேர்ந்து ஒற்றை தொனியில் ஒலிப்பவை அவருடையவை. என்ன தான் அவர் சிறுகதையின் தலைவனாய் இருந்தாலும், அவர் கவிதைகளின் பள்ளத்தாக்குகளில் ஓர் இடையறா வசீகரம் குடிகொண்டிருக்கிறது. அவற்றை வாசிக்க, வாசிக்க, நம் நாளங்களைச் சுண்டிவிட்டு அதிரவைத்து நம்மையும் அப்பள்ளத்தாக்குகளில் குதிக்கச் செய்யும் பேரனுபவத்தைக் கையளிக்கக் கூடியவர்.
தொகுப்பிற்கு நல்ல தலைப்பு கொடுக்கவேண்டும். இது பெரிய கடமை. சமூகத்தின் மெத்தனத்தை, மந்தத்தை மூர்க்கமாய் மோதும் உங்கள் கொள்கையின், இலட்சியத்தின் முகம் போல அந்தத் தலைப்பு இருத்தல் அவசியம். இன்று அகமோ அல்லது புறமோ எழுதித் தப்பிக்க முடியாது. பன் முக எழுச்சிகளின் சொற்களை, உணர்வுகளின் அலைகளை கவிதைக் கடலாக்கத் தெரிய வேண்டும். நாம் ஒவ்வொருவரும் தன்னளவில் முழு மனிதராக இருப்பதும் அவசியம். கவிதைக்கு எங்குமே சன்மானங்களோ பொன்முடிப்புகளோ கிடையாது. கவிஞனின் இதயம் அதன் மீது கொண்டிருக்கும் நீதியுணர்வே எல்லாமும். இப்பொழுதுக்கு இவ்வளவு தான்.
என்றாலும், கவிதைகளைத் தொகுப்பது பற்றிப் பேசும்போதெல்லாம், புஷ்கினின் இந்தக் கவிதையை நான் பகிர்ந்து விடுவதுண்டு. கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்த்தது.
"நீ ஓர் அரசன்.
தனிமையில் வாழ்ந்திரு.
சுதந்திரமான பாதையில் உனது தளையற்ற மனம் எங்கே அழைத்துப் போகிறதோ
அதைத் தொடர்ந்து போ.
நேசிக்கப்பட்ட சிந்தனையின் கனிகளைக் கனியவிடு.
நிறைவேற்றிய உன்னதச் செயல்களுக்கு வெகுமானம் கேட்காதே.
வெகுமானங்கள் உன்னிடமே இருப்பவை.
நீயே உனது உன்னத நீதிபதி.
எவரும் துல்லியமாக உன் படைப்பைத் தீர்ப்பிடார் ஒரு போதும்.
நுட்பமான கலைஞனே! உனக்கு அது சந்தோஷம் தானா? "
~ புஷ்கின்

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi