மார்க்வஸ் எழுதிய லவ் இன் த டைம் ஆஃப் காலரா அதாவது, காலரா காலத்தின் காதல் என்ற நாவலும், ஆல்பர்ட் காம்யூ எழுதிய த ப்ளேக் என்ற நாவலும் கொள்ளை நோய் பற்றிய புனைவுகள். மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவை. இதில் காம்யூவின் நாவல் கொள்ளை நோய்க்காலத்தில் உறவுகளின் விரிசலையும், ஏக்கத்தையும், தனிமைப்படுதலையும் விரிவாகப்பதிவு செய்தது. இந்தக் கொரோனா காலம், பெருங்கொள்ளை நோய்க்காலமாகிறது. கொரோனா பற்றி நிறைய அறிந்துகொள்கிறோம். நாமே தேடிச் செல்லவில்லையென்றாலும் கொரோனோ பற்றிய தகவல்கள் நம்மைத் தேடிவந்து சூழ்கின்றன. நாமே விரும்பாமலும் ஒரு புனைவின் வெளிக்குள் தள்ளப்பட்டது போல இருக்கிறது. இன்னும் நோயின் விபரீதக்கட்டத்தை நாம் எட்டாமலேயே வெறிச்சிடும் உலகத்தின் சில பக்கங்களை நம் கண்ணுற்றுக் கொண்டிருக்கிறோம். நான் தேடித்தேடி வாசித்ததில் நிறைய காதல் கதைகளின் போராட்டங்களும் இந்தக் காலத்தில்
அடங்கியிருக்கின்றன, லவ் இன் த டைம் ஆஃப் காலரா போலவும், த ப்ளேக் போலவும். அன்றாடங்களுக்குப் பழகிப்போன நாம் விபரீதங்களின் வருகையை மெல்லவே ஏற்றுக்கொள்ளும் மனித மனம் படைத்தவர்களாகிறோம். பஞ்சுத்துகள்கள் போல தென்படும் இந்த வைரசுகள் விலங்குகளிலிருந்து மனிதருக்கு இடம்பெயர்ந்தவை. த ட்ரெயின் டூ பூசான் (கொரிய மொழிப்படம் - zombie பற்றியது ) மற்றும் வைரஸ் (மலையாளம்) படங்களில் வைரசின் வெடிப்பு நிலை எவ்வளவு வேகமாக விபரீத நிலையை அடையும் என்பதைப்புனைவாக உணர்ந்த நாம் யதார்த்தத்தில் உணரத் தொடங்கவில்லை. அப்படியொன்று நிகழாமல் போகும் என்று நம்புவோம். எல்லாக்கதவுகளையும் தாழடைத்து, வைரஸ் தொற்றும் மூலங்களையெல்லாம் கண்டறிந்து நீக்கும் அவகாசம் இல்லாமல் விபரீதத்தை எய்துவதை ப்ளேக்கில் காம்யூ விவரித்திருப்பார். பொதுவாக, விபரீதங்கள் நாடகார்த்த தன்மை இல்லாமலேயே நிகழ்ந்துவிடுமோ என்று தோன்றுகிறது.
க்யூபா, பிற நாட்டு நோயாளிகளைத் தன்னிலத்தில் இறக்கிக்கொள்வதெல்லாம் சரித்திர நிகழ்வு. பிற்காலத்தில் இது திரைப்படமாகும். வெர்னர் ஹெர்சாக் போன்றவர்கள் காலத்தின் சாட்சி போல இதை அத்தனை நுணுக்கங்களுடனும் பதிவுசெய்யக்கூடும். இப்பெருங்கொள்ளை நோயை நாம் கடந்த பின் இது போன்ற நிறைய சரித்திர நிகழ்வுகளை, வெளிவராமல் இருந்தவற்றையெல்லாம் நாம் அறியக் கூடும். உணர்ச்சி கொந்தளிக்கும் நிறைய தருணங்கள் இந்தக் கொள்ளைநோய் வெளியில் நிறைந்திருக்கின்றன. மெல்ல மெல்ல அத்தகைய தருணங்களின் கதைகள் நம்மைச் சேர்ந்தவண்ணம் இருக்கின்றன.

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi