ஹாருகி முராகாமியின் கதைகள் பிடிக்கவில்லை என்று என் வாழ்க்கையில் இரண்டு நண்பர்களுடன் சண்டையிட்டுருக்கிறேன். சமீபத்தில், ஒரு வாரத்திற்கு மேல் ஓய்வான காலம் கிடைக்க, முராகாமியின் Killing Commendatore நாவலும் கையில் கிடைக்க, படிக்கலாம் என்று இறங்கினேன். 529 பக்கங்கள். 2018 - இல் வெளிவந்த நாவல்.
மனைவியை விட்டுப் பிரிந்து வந்து தனியாக மலையுச்சியில் நீண்ட மழைக்காலத்தைக் கழிக்கும் ஓர் ஓவியனின் கதை. பின்னணியில், ஜப்பானிய மரபோவியத்தையும் நவீன ஓவியத்தையும், புகழ்மிக்க ஓர் ஓவியரைக் கற்பனைக் கதாபாத்திரமாக்கிக் கதையாக்கிக் கொண்டு செல்கிறார். அதே சமயம், மையக் கதாபாத்திரமும் தன் ஓவிய பாணியில் வேறு கட்டத்தை நோக்கி நகர்கிறார். சுவாரசியமும், நம் யதார்த்த வெளியிலும் கதையின் வெளி ஊடுருவ நிற்கும் தன்மைகளும் நிறைந்த கதை. உலகமெங்கும் கலைஞர்கள் ஒரே மாதிரி தான் இருக்கிறார்கள். ஆனால், இந்த ஓவியர் கழிக்கும் தனிமையில் இயற்கையின் அற்புதங்களும் கையிருப்பில் இருக்கும் உலகப்புகழ் மிக்க இசைக்கலைஞர்களின் இசைத்தட்டுகளில் கசியும் இசையும் நிறைந்திருப்பது, அந்தத் தனிமையில் நம்மை நேரடியாக பங்கு பெற வைக்கிறது. எழுத்திற்கிடையே இசையின் காற்றையும் உணரமுடியும். அயராமல் வாசிக்க முடிந்த நாவல்.
பாதிக்கு மேல், மர்மங்கள் நிறைந்த வெளிக்குள் அழைத்துச் செல்கையில் கொஞ்சம் அயர்ச்சி தட்டுகிறது. இந்தப்பகுதியில் ஜப்பானிய அனிமேஷன் திரைப்பட இயக்குநர் Hayao Miyazaki கதாபாத்திரங்களைப் போலும், Ueda Akinari - யின் கதைவெளிக்குள்ளும் கதை நுழைவதைப் போல் இருக்கிறது. எழுத்தாளரின் கண்கள் வழியாகக் காட்டும் உலகம் யதார்த்தத்தை மீறி மர்மங்களான வெளிக்குச் செல்கையில் அவர் நம்மைப் பற்றிச் சென்ற கைகளை விட்டுவிட்டது போல் தோன்றுகிறது. மர்மங்களான வெளியில் பகுத்தறிவுக்கு வேலை இல்லை என்பதால் போலும்.
தற்பொழுது, Tahar Ben Jelloun என்ற மொராக்கோ படைப்பாளியின் A Palace in the Old Village என்ற நாவலை வாசிக்கத் தொடங்கியிருக்கிறேன். சிறிய நாவல் தான். நாவலுக்குள் நுழைகையில் புதிய மனிதர்களையும் புதிய காலத்தையும் எதிர்கொள்வது என்ற வழக்கமான காரணம் தான் நாவல்களை வாசிக்க உந்துகிறது.

Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi