மேட்டுப்பாளையம் என்றால் யாழினிஸ்ரீயினுடையது என்று தான் நினைவில் தங்கும். அந்த அளவிற்கு முக்கியமான பயணமாகவும் நிகழ்வாகவும் 13.10.19 அமைந்தது. நல்வாய்ப்பாக, இந்த நிகழ்வை நான் மறுக்கவில்லை என்ற எண்ணமும் கூடவே தோன்றியது. கவிஞர் தனசக்தியின் அழைப்பின் பேரில், தொடர் அழுத்தத்தின் பேரில் தான் யாழினிஸ்ரீயின் ‘மரப்பாச்சியின் கனவுகள்’, நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டேன்.
கவிஞர் யாழினிஸ்ரீக்கு கழுத்துக்குக் கீழே உடல் கல்லாகி உறைந்து போனது போல் இயக்க முடியாத நிலைக்குச் சென்றுவிட்டது. வயது முப்பத்தியொன்று. முடக்குவாதத்தைக் கையாளும் மருத்துவ அசிரத்தையும் போதாமையும் நிகழ்ந்து நம்மில் பலபேருக்கு இந்த நிலை ஏற்பட்டதைப் போலத்தான் யாழினிஸ்ரீக்கும். மனிதர்களில் கழிவிரக்கம் நிறைந்தவர்களை அன்றாட வாழ்க்கையில் சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். யாழினிஸ்ரீயிடம் அப்படியெல்லாம் ஏதுமில்லை. எல்லோர் மீதும் அன்பைப் பொழிந்து கொண்டே இருக்கிறார், மகிழ்வைக் கொட்டிக் கொண்டே இருக்கிறார். அவர் அருகில் நீங்களும் அப்படியான ஒருவராய் மாறிவிடுவீர்கள். ஆளுமை நிறைந்த பெண்ணாக இருக்கிறார்.
காலையில் கொஞ்ச நேர உரையாடலுக்குப் பின் மெல்ல நூல்வெளியீட்டு விழா தொடங்கியது. நிகழ்வு முடியும் வரை யாரும் இருந்த இடம் விட்டு அசையவில்லை. ஒவ்வொரு கட்டுரையையும் வாசித்து முடிக்கும் வரை பொறுமையாக இருந்தனர். அவருக்காகவே தொலைதூரத்திலிருந்தெல்லாம் புறப்பட்டு வந்திருந்தனர். வந்தோம் சென்றோம் என்றில்லாமல் எல்லோரும் உடனிருந்து நூலை வாசித்துப் போற்றிச் செல்வதற்காகவே வந்திருந்தது போல் எந்த அவசரமுமின்றி இருந்தனர்.
மொழியில் தொனிக்கும் மேதைமை, அயராது தன்னைத் தானே தாண்டிச் செல்லும் தன்மை, நெடுங்கவிதைகளில் புரளும் அலட்சியம், தன் சுய உலகத்தை நுட்பமாய்ச் சொல்லிச் செல்லும் விதம், சொல்லாட்சி என்று தன் கவிதைகளிலேயே தன்னை அடையாளம் காட்டிவிடும் ஆளுமை என்றிருக்கும் யாழினிஸ்ரீயைப் பார்த்து வியந்து நின்றேன். அன்றாடம் அவருடன் பழகும் எவராலும் எளிதாக அவரைப் புறக்கணித்துவிட முடியாது. பிடிவாதம் மிக்கவர்.
நாம் எல்லோரும் அவருக்கு ஏதேனும் செய்தாக வேண்டும். கவிஞர் தனசக்தி இரண்டு விடயங்களை முன்வைக்கிறார். ஒன்று, யாழினிஸ்ரீயின் அன்றாடத்தைப் பராமரிப்பதற்குத் தேவயான பொருளாதார உதவி. இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, அவரைக் கவனித்துக் கொள்ளும் மருத்துவர் பரிமளாவிடம் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறேன். மருத்துவ வல்லுநர்களை அழைத்து யாழினிஸ்ரீயின் இடுப்பு வரையிலான பகுதிக்கேனும் ஏதேனும் அறுவை சிகிச்சை முயற்சி செய்ய இயலுமா என்று பார்க்க. அதற்கே அந்த மருத்துவராலும் யாழினிஸ்ரீயின் அம்மாவாலும் கடுமையான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும்.
இரண்டாவது, யாழினிஸ்ரீயைக் கவனித்துக் கொள்ளும் அவரது அம்மாவிற்கு உடல்நலத்தைப் பேணுவதற்கான மருத்துவச் செலவு. நமக்கிடையே, நம் பார்வைகளின் முன்னால் யாழினிஸ்ரீயை நாம் இப்படியே அதோகதியாய் விடக்கூடாது. பொருளாதார வளம் மிக்கோர் அவரின் அன்றாடத்தில் நிச்சயமாய்ப் பொறுப்பெடுத்துக் கொள்ளவேண்டும். தன் அன்பை அவருடன் பகிர்ந்து கொள்ளவேண்டும். அவர் வாழ்க்கைத் தரத்தை இது கண்டிப்பாய் உயர்த்தும். உங்கள் ஒவ்வொருவராலும் என்ன செய்யமுடியும் என்று பாருங்கள்.
அவரது உடல்நிலை குறித்து பரிவு கொண்டு இந்தப் பதிவை எழுதுவதை விட, அவரது ஆளுமை குறித்து வியந்தே இந்தப் பதிவை முன்வைக்கத் தோன்றுகிறது. நூல்வெளியீட்டிற்குப் பின், மதிய உணவிற்கு ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வு முடிந்ததும் எல்லோரும் உணவு உண்டு விட்டுத்தான் செல்லவேண்டும் என்று எல்லோரையும் கட்டாயப்படுத்தினார், யாழினிஸ்ரீ. அதேபோல், அவரிடம் சென்று வருகிறேன் என்று சொல்லிவிட்டுத்தான் எல்லோரும் கிளம்பிச்செல்ல வேண்டும் என்றும் வற்புறுத்தினார்.
யாழினிஸ்ரீ, அடுத்தடுத்து கவிதைகள் எழுதுவார் என்று தோன்றுகிறது. எழுதாமல் அவரால் இருக்க இயலாது. ஒரு நாளும் ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கும் அவரது சிந்தனைச் செயல்பாடு, உடல்செயல்பாடு இன்மையால் குன்றிப்போய்விடாது என்று தோன்றுகிறது. என்றாலும், அவரது உடல்நிலையில் வாழ்க்கைத் தரத்தில் இதை வாசிப்பவர்களால் மாற்றத்தைக் கொண்டுவர இயலும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
முழுநாளும் தனிமனித வாழ்வின் பாடத்தை மனம் தன் போக்கில் மனனம் செய்து கொண்டே இருந்தது போல இருந்தது. வாழ்வின் ஒரு நாள் திடமான பிரியால் ஆக்கப்பட்டது போல இருந்தது. எல்லாவற்றிற்குப் பின்னும், மாலை நெருங்கவும் தனியாக இருக்கவேண்டும் போல் இருந்தது. புறப்படும் நேரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே ரயில் நிலையத்திற்கு வந்து உலாவிக் கொண்டு இருந்தேன். அழகான சிறிய பழைய ரயில்நிலையம், மேட்டுப்பாளையம் ரயில் நிலையம். நிலையத்தின் எதிரே மலைக்கு மேலே மேகங்கள் குழுமியிருக்க நிலவு மங்கலாய் மிதந்து கொண்டிருந்தது.
அன்று கற்றுக்கொண்ட பாடங்களை எல்லாம், யாழினிஸ்ரீயைச் சந்திக்கவில்லையென்றால் கற்றிருக்கமுடியாது என்று தோன்றியது.
Kutti Revathi is a Tamil poet, translator, and filmmaker. This site brings together poetry, books, and selected creative work.
Enquiries welcome for poetry, translations, film, and literary events.
Site: Kutti Revathi